அமல உற்பவப் போரணியின் வரலாறு

1917 அக்டோபர் 16 அன்று இளம் உப தியாக்கோனாயிருந்த மாக்ஸிமிலியன் மரிய கோல்பே ஒரு புதிய சபையின் கூட்டத்தைக் கூட்டினார். அவரோடு ஆறு இளம் சபைத் துறவிகள் இருந்தார்கள். “ஒரு தொடக்க ஜெபத்திற்குப் பிறகு, சுவாமி அலெக்ஸாண்டர் பெசீலின் ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது. பரிசுத்த பாப்பரசரின் தனிப்பட்ட ஆன்மகுருவாக சுவாமி பெசீல், தாமே நேரடியாக அமல உற்பவப் போர் வீரர்கள் பற்றிய அறிக்கையைப் பாப்பரசரிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். இந்தப் போரணியின் முக்கியக் குறிக்கோள், அதை அடையும் வழிகள், இந்தப் போரணியில் சேர்வதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த இந்த செயற்திட்ட அறிக்கையை அவர் பாப்பரசரிடம் சமர்ப்பிப்பார். இந்த ஒவ்வொரு விவரமும் விவாதிக்கப்பட்டது. அமல உற்பவப் போரணியின் மீது இந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், விசுவாசமும், அன்பும் அவர்களுடைய முகங்களில் பிரதிபலித்ததைக் காண முடிந்தது. அவர்கள் இந்தச் செயற்திட்டத்தைப் பற்றித் தீவிரமாக விவாதித்து ஒரு திருப்திகரமான முடிவெடுத்தனர். இறுதியாக அமல உற்பவியின் வழியாக எப்படி ஆன்மாக்களைக் காப்பாற்றுவது என்பது பற்றிய திட்டம்தான் அது. (....) உண்மையில் இந்தக் கூட்டத்திற்கு யாரும் தலைமை தாங்கவில்லை. துறவிகள் வெறுமனே இரண்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்த தேவ அன்னையின் சுரூபத்தைச் சுற்றி ஒன்றுகூடியிருந்தனர்” என்று இந்த முதல் கூட்டத்தைப் பற்றி அர்ச் மாக்ஸிமிலியன் குறிப்பிடுகிறார்.

மாக்ஸிமிலியன் கோல்பேயும், போரணியின் ஸ்தாபகக் கூட்டத்தில் அவரோடு இருந்த ஆறு துறவிகளும்தான் அமல உற்பவியின் முதல் போர்வீரர்களாக இருந்தார்கள். 1917 அக்டோபர் 17-ம் நாளை போரணியின் தொடக்க நாளாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.