மரியாயின் வழியாக உத்தமதனம் அடையும் வழி

நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் வேறு வழியில் உலகிற்கு வந்திருக்க முடியும் என்றாலும், மாமரியின் வழியாகத்தான் அவர் உலகிற்கு வந்தார். ஆதாமைப் போல முழு வளர்ச்சியடைந்த மனிதனாக அவர் வந்திருக்க முடியும். ஆனால் நமதாண்டவராகிய சேசு, தாழ்ச்சியின் காரணமாக, சிருஷ்டிகளைச் சார்ந்திருப்பவராகத் தாம் இருக்க வேண்டும் என்று விரும்பினார், நேரடியாக அல்ல, மாறாக, மற்றவர்களின் வழியாகத் தம்மை உலகிற்குத் தர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

கிறீஸ்துநாதர் மரியாயின் வழியாக நம்மிடம் வந்தது போலவே, நாமும் வேறு எந்த வழியாகவும் அல்லாமல், மரியாயின் வழியாக மட்டுமே அவரிடம் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். கடவுளிடம் செல்ல பல்வேறு வழிகள் இருக்கின்றன என்றாலும், நான் குறித்துக் காட்டுகிற இந்த வழிதான் அனைத்திலும் குறுகியதாகவும், அனைத்திலும் அதிகப் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

நாம் (அமல உற்பவப் போரணியின் உறுப்பினர்கள் என்ற முறையில்) நமக்கென மிக நுட்பமாக இந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இந்த வழியாகத்தான் நாமும் போகிறோம், இதே வழியில் தான் எல்லா மனிதர்களையும் சேசுக்கிறீஸ்துநாதரிடம் கொண்டு வரவும் விரும்புகிறோம்.

நமக்கு மிக விருப்பமான முறையில் வளர்ச்சி பெற்று வருகிற அமல உற்பவப் போரணியின் விருதுவாக்கு என்னவெனில், ‘மரியாயின் வழியாகவே எல்லோரையும் சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயத்திடம் நாம் கொண்டு வர வேண்டும்’ என்பதே. அல்லது இதை வேறு வார்த்தைகளில் கூறுவதனால்: “அமல உற்பவி சகல ஆன்மாக்களின் இராக்கினியாகவும், ஒவ்வொரு தனிப்பட்ட ஆன்மாவின் இராக்கினியாகவும் ஆக வேண்டும்” என்பதே அந்த விருதுவாக்கு. உண்மையில், ஆத்துமங்களின் மனந்திரும்புதலைப் பொறுத்தவரை, மரியாயின் வழியாகத்தான் இதை நாம் செய்து முடிக்க முடியும். சர்வேசுரன் தமது அளவிட முடியாத நன்மைத்தனத்தில், தமது திருத்தாயாரைத் தமது வரப்பிரசாதங்களின் மகா பரிசுத்த பொக்கிஷதாரியாக ஏற்படுத்தியிருக்கிறார். அவற்றை அவர் மாமரியின் வழியாக மட்டுமே உலகத்தின் மீது பொழிகிறார். ஆகவே, மாமரியின் மன்றாட்டின் வழியாகவும், மத்தியஸ்தத்தின் வழியாகவும் மட்டுமே நாம் எப்போதும் சர்வேசுரனிடம் வரப்பிரசாதங்களைக் கேட்க வேண்டும் என்பது தகுதியானதாக இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவருக்கு முன்பாகவோ, அல்லது வேறு யாராவது ஒரு உயர் அதிகாரியின் முன்பாகவோ போக விரும்பினால், அவன் வெறுமனே தனியாகப் போக மாட்டான். மாறாக, தனக்காகப் பரிந்து பேசக்கூடிய பிரபலமான ஒருவரை எப்போதும் அவன் தன்னோடு அழைத்துச் செல்கிறான். அப்படியிருக்க, எப்போதும் மரியாயின் வழியாகவும், மரியாயோடும் கடவுளிடம் பேசுவது நமக்கு எவ்வளவு அதிகத் தகுதியான செயலாயிருக்கிறது! மிகக்குறுகிய காலத்தில் அர்ச்சியசிஷ்டவர்களாக ஆனவர்கள் எல்லோருமே மரியாயின் பக்திப்பற்றுதலுள்ள விசேஷ பக்தர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவ்வாறே நாமும், அவர்களை விட ஞான நன்மைகளில் நூறு மடங்கு குறைந்தவர்களாக இருந்தாலும், எப்போதும் மரியாயோடுதான் உத்தமதனத்தின் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.

உத்தமதனத்தில் கணிசமான அளவுக்கு நாம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக நமக்குத் தோன்றலாம். ஆனால், அதைப் பற்றி நாம் இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்போது, நம்மிடம் இன்னும் எவ்வளவு குறைகளும், தவறுகளும் இருக்கின்றன என்பதைக் கடவுளின் வரப்பிரசாதத்தின் உதவியோடு நாம் கண்டுகொள்வோம். நாம் நம்மைச் சுற்றியுள்ள ஆகாய வெளியைப் பார்க்கும்போது, அது சுத்தமானதாக இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒரு சிறு திறப்பின் வழியாகப் பிரகாசிக்கும் சூரிய ஒளிக்கற்றையில் பார்க்கும்போது, அதில் எவ்வளவு தூசித்துகள்கள் மிகுந்துள்ளன என்று நாம் காண்கிறோம். அவ்வாறே நம் ஆன்மாவும், எந்த அளவுக்கு தேவ வரப்பிரசாதத்தால் ஒளிர்விக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அது தன் குறைபாடுகளையும், அவற்றின் பெரும் எண்ணிக்கையையும் கண்டுகொள்கிறது. இந்தக் குறைபாடுகளில் இருந்து ஒருவன் தன்னை சுத்திகரித்துக் கொள்வதற்கு அவன் அடிக்கடி ஆத்தும சோதனை செய்வது நல்லது. ஏனெனில், அந்தக் குறைபாடுகள் எண்ணிக்கையில் மிக அதிகமானவையாக இருந்தாலும், ஆத்துமம், அவற்றைக் கவனித்து, அவற்றிற்காக மனம் வருந்தி, அமல உற்பவியிடம் மன்னிப்புக் கேட்கும்போது, எல்லாம் சரியாகிறது, மிக நல்லதாகிறது. ஆனால் ஆத்துமம் அவற்றைக் கண்ட பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அது இன்னும் அதிக மோசமாகிறது. அசட்டைத்தனம் தன்னிடமிருந்தால், ஒருவன் அதைப் பற்றி அச்சம் கொள்ள வேண்டும்.

நம்மில் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். நீதியின்படி அவருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய நேரம் வரும்போது, தராசு பெருமளவுக்கு நமக்கு எதிர்ப் பக்கம்தான் தாழ்ந்து நிற்கும். ஆனால், நாம் நம்மையே முழுமையாக அமல உற்பவிக்கு அர்ப்பணிக்கும்போது, அவர்கள் தனது பேறுபலன்களையும், தனது திருக்கரத்தையும் நம்முடைய தராசுத்தட்டில் வைப்பார்கள். அப்போது, நமது தட்டு பெருமளவுக்கு தாழ்ந்து நிற்கும் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். அமல உற்பவி கடவுளின் நீதிக்கு எதிராகத் தன் மேற்பார்வையைக் கொண்டு நம்மை மூடிக் கொள்வார்கள்.

கிறீஸ்தவ உத்தமதனம் என்பது நம் சித்தத்தைக் கடவுளின் சித்தத்தோடு ஒன்றிப்பதில் அடங்கியுள்ளது. இனி, அமல உற்பவியின் சித்தம் எந்த அளவுக்கு கடவுளின் திருச்சித்தத்தோடு நெருக்கமாக இணைந்திருக்கிறது என்றால், அவை இரண்டும் ஒரே சித்தமாகத் தோன்றுகின்றன. நாம் கடவுளின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவது பற்றிப் பேசும்போது, அமல உற்பவியின் திருச்சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறோம் என்று நாம் எளிதாகச் சொல்லிவிடலாம். அப்படிச் செய்யும்போது, கடவுளின் மகிமையை நாம் குறைத்து விடுவதில்லை, மாறாக, அதை நாம் அதிகரிக்கிறோம். ஏனெனில் அப்படிச் செய்யும்போதுஇ மரியாயின் உத்தமதனத்தை கடவுளின் மிக உத்தமமான சிருஷ்டி என்ற முறையில்தான் நாம் போற்றித் துதிக்கிறோம். அவர்களுடைய சித்தம் சர்வேசுரனுடைய சித்தத்தோடு முழுமையாக ஒன்றித்திருப்பதால்தான் அவர்களை நாம் வாழ்த்திப் போற்றுகிறோம். ஆகவே, அன்புள்ள சகோதரர்களே, அமல உற்பவியின் சித்தத்தைப் பற்றிப் பேச அஞ்சாதீர்கள். ஏனெனில் அது தேவ திருச்சித்தமாகவே இருக்கிறது.

நான் வேறு எதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்?.... நீங்கள் அனைவரும் அமல உற்பவியின் சித்தத்தை அதிக நுட்பமாகவும், ஆர்வத்தோடும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதிக நேசப் பற்றுதலோடு அவர்களை நேசிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். அப்படி செய்வதால், நாம் கடவுளுக்கு அதிக மகிமையளிக்கிறோம், உத்தமதனத்தில் வெகுவாக முன்னேறுகிறோம், அமல உற்பவியின் வழியாக சேசுகிறீஸ்துநாதருக்கு மிக ஏராளமான ஆன்மாக்களை சம்பாதிக்கிறோம்.

அமல உற்பவியின் திருநகரம், புதன்கிழமை, 30.05.1933.


No photo  news016.jpg