அமல உற்பவியில் சக போர்வீரன்.
ஜனவரி மடல்
அமலோற்பவ மாமரி ஸ்துதிக்கப்படுவார்களாக!
அன்புள்ள அமல உற்பவப் போர்வீரர்களே,
பெத்லகேமின் இரவின் பிரகாசம் இன்னும் மறைந்து விடவில்லை. புத்தாண்டு, ஒரு புதிய தொடக்கம், ஏற்கனவே நமக்கு முன்பாக இருக்கிறது. கடவுள் தம் மக்களைச் சந்தித்தார் என்பதில் இடையர்கள் உறுதியாயிருந்தார்கள். அவர்கள் தங்கள் மந்தைகளிடம் திரும்பி வந்தார்கள். சர்வேசுரன் பெத்லகேமில் மனிதனாய் வந்து பிறந்திருந்தும், எதுவும் மாறியிருப்பதாகத் தோன்றவில்லை. அதே கஷ்டமான வேலை, அதே அன்றாடப் பிரச்சினைகள் ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனாலும் சேசுபாலனின் நேசத்தின் பலனாக, சம்மனசானவருடைய வார்த்தைகளில் நாம் கொள்ளும் நம்பிக்கையின் காரணமாக, இருதயங்கள் மாறியிருக்கின்றன. நேசம் மட்டுமே எல்லாவற்றையும் மாற்ற வல்லதாக இருக்கிறது. அது அந்தஸ்தின் கடமைகளையும், மற்ற மனிதர்களோடு நமக்கிருக்க வேண்டிய உறவுகளையும் ஒளிர்வித்துக் காட்டுகிறது. அது கடவுளுக்கும், நம் சகல மனிதர்களுக்கும் ஊழியம் செய்ய நமக்கு உதவுகிறது. மிக மோசமான குழப்ப நிலையிலும், நேசத்தை அதிக அற்புதமானதாக்கும்படி கடவுளால் எதையும் தரவும் திரும்ப எடுத்துக் கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ள நேசத்தால் மட்டுமே முடியும். பல அர்ச்சியசிஷ்டவர்கள், தாங்கள் கடவுளின் அதிமிக மகிமைக்காகத் துன்புறுவதில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை மட்டுமின்றி, இன்னும் அதிகமாகத் துன்புறுவது தங்களுக்கு மகிமையாக இருந்திருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள்.
நாம் சொந்தமாகக் கொண்டிருப்பதெல்லாம் நம் சுய சித்தம்தான். இந்த சுதந்திரம் பல மோசமான சந்தேகங்களை எழுப்புவதால், அது மிகப் பல தடவைகள் நம்மைக் கீழே இழுத்திருக்கிறது. கடவுள் நம் கொடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஆகவே நமக்கு சாத்தியமில்லாத காரியங்களை அவர் நம்மிடம் கேட்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இங்கே ஒரே ஒரு கேள்விதான் உள்ளது் “நீ உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க விரும்புகிறாயா ?” என்பதுதான் அது. இதே போன்ற பிரச்சினைதான் நாசரேத்தில், மார்ச் 25 அன்று எழுந்தது. அப்போது அந்த ஏழை இளம்பெண் கடவுளுக்கு இப்படிப் பதில் கூறினார்கள்:“ இதோ, நான் ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.” இந்தப் பதிலால் அவர்கள் பரலோக பூலோக இராக்கினியாகவும், கடவுளின் திரு இருதயத்தின் எஜமானியாகவும் ஆனார்கள்! இப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்திற்காகக் கடவுள் தம் அர்ச்சியசிஷ்டவர்களைக் குறித்து வைக்கிறார். “தேவ அன்னையைப் போல கடவுளுக்கு அடிமையாயிருத்தல் எனக்குரியதல்ல, நான் பெரும் பாவி” என்று சொல்லும் போலியான தாழ்ச்சியின் காரணமாக, நாம் நம் சித்தத்தைக் கடவுளின் சித்தத்திற்குப் பணியச் செய்யத் தயங்கக் கூடாது. சந்தேகமின்றி, நாம் சம்மனசுக்களைப் போன்றவர்கள் அல்ல, எந்நேரமும் பலவீனத்தாலும், நம் நிர்ப்பாக்கிய நிலையாலும் நாம் கால் இடறுகிறோம். மனிதர்களின் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர்களுடைய கடவுள் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறார். அவர் கவலையின் நெருப்பில் இருக்கிற அவர்களுடைய ஆத்துமங்களுக்காகப் போராடுகிறார். ஏனெனில், அர்ச்சியசிஷ்டவர்கள் அறிந்திருந்தது போல, “ஒரு பொருளுக்கு விலை மதிப்பு எதுவும் இல்லையென்றால், அதை அடைவதற்கான முயற்சி தகுதியற்றது.”
திருக்குடும்பத்தை நாம் கூர்ந்து கவனிப்போம் என்றால், கடவுள் தம் இருதயத்திற்கு மிகப் பிரியமானவர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதை உடனே புரிந்து கொள்வோம். அது எல்லாமும் நீண்ட காலம் அலைந்து திரிதல், நிச்சயமற்ற நிலை, தரித்திரம், இறுதியாக கல்வாரியின் வழியாகத் தப்பிச் செல்வதில் தொடங்குகிறது. முதல் பார்வையில் கல்வாரிதான் முடிவு என்பது போலத் தோன்றுகிறது. இந்த கணத்தில் நம்மில் பலர், “அவர்கள் தோற்றுப் போய்” வெளியேறி விட்டார்கள் என்று நினைக்கத் தலைப்படுகிறோம். ஆனால் இன்னும் நன்றாகக் கூர்ந்து கவனிப்போமானால், இன்னும் ஆழமாகச் சென்று பார்ப்போமானால், அங்கே மகிமையான உயிர்ப்பையும், பரலோக ஆரோகணத்தையும், நித்திய மகிமையின் முடிசூட்டப்படுதலையும் நாம் காண்போம். விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகியவை, நாம் அவநம்பிக்கைபபடவோ, நம் போராட்டத்தைக் கைவிட்டு விடவோ நம்மை அனுமதிக்காது. அர்ச். சியென்னா கத்தரீனம்மாள், “போராடாதவர்கள் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறாதவர்கள் தோல்வியடையப் போகிறார்கள்” என்று கூறுகிறாள். நம் பயம் இயல்பானதுதான். கஷ்டங்கள், சோதனைகளுக்கு முன்பாக நாம் அதிகம் பலவீனப்பட்டு விடுகிறோம். திறமையற்ற, பலவீனமான குழந்தைகளாக நாம் “அம்மா, எனக்கு உதவுங்கள்!” என்று நம்பிக்கையோடு அழைக்க முடியும். ஏனெனில் நம்முடைய நிர்ப்பாக்கிய நிலை பற்றி நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். இதோ அவர்கள் வருகிறார்கள்... ஆனால் அவர்கள் தனியாக வரவில்லை. புத்தாண்டு தினத்திற்கு முந்தின நாளில் அவர்கள் நமக்கு சேசுபாலனைத் தருகிறார்கள். அவரோ தமது இனிமையாலும், தயவாலும் மிகவும் கடினப்பட்டுப் போன இருதயங்களை நொறுக்கக்கூடியவராக இருக்கிறார். அவர் ஒரு சிருஷ்டிக்கும் சிருஷ்டிகருக்கும் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்;. சேசுநாதர் புதிய போர்களுக்காக நம்மை ஆசீர்வதிக்கிறார். “தாம் உலக முடிவு வரையிலும் எந்நாளும் நம்மோடு இருப்பதாக” அவர் நம்மை உறுதிப்படுத்துகிறார். அவர் இடைவிடாமல் தேவ நற்கருணைப் பேழையில் காத்திருக்கிறார். நம் ஆத்துமங்களை உயர்த்தவும், ஒருவரையொருவர் நேசிக்கும் இருவரிடையே இரகசியங்கள் எதுவும் இருப்பதில்லை என்பதால், நாம் மனதில் உள்ளதை வெளிப்படையாக நாம் அவரிடம் பேசுவதைக் கேட்கவும் அவர் விரும்புகிறார். மிகச் சிறிய சாமர்த்தியமின்மை, பாசமுள்ள ஒரு இருதயத்தைக் காயப்படுத்தி விடக் கூடும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். உலகம் தொடர்ந்து கிறீஸ்துநாதரைக் கசைகளால் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவருடைய பாதுகாப்பான புகலிடமாக ஆவதற்கு நாம் நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும். நாம் கவலைகளையும் துன்பத்தையும், மகிழ்ச்சியைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே அவருக்குக் கொண்டு வருவோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆயினும், நாம் கற்பனை செய்து பார்க்கக் கூடிய அனைத்திலும் அதியற்புதமான ஒரு பரிசு நம்மிடம் உள்ளது. ஆம் நாம் நம் சித்தத்தைக் கொண்டிருக்கிறோம். அது வெகு நீண்ட காலமாக “சவுல் என்னும் பெயருள்ள ஓர் இளை”னின் பாதத்தருகில்” (அப்.7:57) விழுந்து கிடந்தது. அர்ச். மாக்ஸிமிலியன் சொல்கிறபடி, மிகப் பெரும் அர்ச்சியசிஷ்டவர்களாக ஆவதற்கு நாம் திரும்பத் திரும்ப முதலிலிருந்து தொடங்க வேண்டும். நாம் வீணாக்கிய நேரத்திற்கு ஈடு செய்யவும் வேண்டும்.
அமல உற்பவியில் சக போர்வீரன்.