வரலாறு

நம் பாத்திமா அன்னை ஜசிந்தா, பிரான்சிஸ்கோ, லூசியா என்னும் தனது மூன்று இடைச் சிறார்களுக்குத் தன்னுடைய வெளிப்படுத்தல்களில், மனிதர்களிடையே தான் அதிகமாக அறிந்து நேசிக்கப்படும்படியாக, தனது மாசற்ற இருதய பக்தியை உலகில் ஏற்படுத்த ஆண்டவராகிய சேசுநாதர் விரும்புகிறார் என்று கூறினார்கள். பாத்திமாவில் 1917 ஜுலை 13 அன்று நமதன்னை ‘பரிதாபத்திற்குரிய பாவிகள் செல்லும் நரகத்தை இப்போது கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். நான் சொல்வது செய்யப்படுமானால், அநேக ஆன்மாக்கள் மனந்திரும்பும், உலகில் சமாதானம் இருக்கும்.

ரஷ்யா என் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை உட்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்பதற்காக நான் (மீண்டும்) வருவேன்’ என்றார்கள்.

பாவிகளால் மிகப் பெருமளவு செய்யப்படும் நிந்தை, துரோகங்களால் மிக அதிகமாகத் துன்பப்படும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு இந்த பக்தி ஆறுதல் அளிக்கிறது. இதற்குப் பிரதிபலனாக, இந்த பக்தி முயற்சியைப் பிரமாணிக்கமாக அனுசரிக்கும் அனைவருக்கும் மாமரி நித்திய இரட்சணியத்தை வாக்களிக்கிறார்கள்! இந்த பக்தி முயற்சியின் வழியாக, நித்திய தண்டனைத் தீர்ப்பிலிருந்தும், மகா பரிசுத்த கன்னிமாமரியால் முன்னறிவிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்தும், பெரும் அழிவுகளிலிருந்தும் அநேக ஆத்துமங்களைக் காப்பாற்றுவதில் விசுவாசிகள் தேவ அன்னைக்கு உதவ முடியும்.

பாத்திமா செய்தி கோவா தா ஈரியா என்னுமிடத்தில் 1917-ல் நடந்த மாதாவின் ஆறு காட்சிகளோடு முடிந்து விடவில்லை.

1925இ டிசம்பர் 10 அன்று, மகா பரிசுத்த கன்னிகை சகோதரி லூசியாவுக்குத் தோன்றினார்கள். அவர்களுக்கு அருகில் சேசுபாலன் ஓர் ஒளிரும் மேகத்தின் மீது நின்று கொண்டிருந்தார். மகா பரிசுத்த கன்னிகை லூசியாவின் தோளின் மீது தன் கரத்தை வைத்தபடி, அதே வேளையில், தன்னுடைய மறு கரத்தில் தான் வைத்திருந்த, முட்களால் ஊடுருவப் பட்டிருந்த ஒர் இருதயத்தை அவளுக்குக் காட்டினார்கள். அதே நேரத்தில் தேவ குழந்தையானவர் அவளிடம்: ‘முட்களால் குத்தி ஊடுருவப்பட்டிருக்கிற உன் மிகப் பரிசுத்த அன்னையின் இருதயத்தின் மீது இரக்கப்படு. நன்றியற்ற மனிதர்கள் ஒவ்வொரு கணமும் அந்த முட்களைக் கொண்டு ஒவ்வொரு கணமும் அதைக் குத்தித் துளைக்கிறார்கள். பாவப் பரிகாரம் செய்து அவற்றை அகற்றுவார் யாருமில்லை’ என்றார்.

அதன்பின் மகா பரிசுத்த கன்னிகை பேசினார்கள்:

‘என் மகளே, நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தேவதூஷணங்களாலும், நன்றியற்ற தனத்தாலும் ஒவ்வொரு கணமும் என்னைக் குத்தித் துளைக்கிற முட்களால் சூழப்பட்டிருக்கிற என் இருதயத்தைப் பார். நீயாவது அதற்கு ஆறுதலளிக்க முயற்சியெடு. தொடர்ச்சியாக ஐந்து மாதங்களின் முதல் சனிக்கிழமைகளில், என் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்யும் கருத்துடன், பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை உட்கொண்டு, ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களை தியானித்தபடி, என்னோடு தங்கியிருப்பவர்களுக்கு அவர்களுடைய மரண வேளையில் இரட்சணியத்திற்கு அவசியமான சகல வரப்பிரசாதங்களையும் கொண்டு உதவி செய்வதாக நான் வாக்களிக்கிறேன் என்று என் பெயரால் அறிவி.